இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சொரகொளத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு எதிரே காப்புக் காட்டிற்கு செல்லும் வழியில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்துள்ளார். அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் யார் என்பது இன்னும் தெரியவரவில்லை. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் இதனால் ஏற்பட்ட தகராறில் மர்மநபர் இளம்பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், அசோக் குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் மோப்பநாய் பெண்ணின் பிணத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிய தூரம் ஓடி நின்றுவிட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் அங்குள்ள தடையங்களை சேகரித்துள்ளனர். இதனையடுத்து பெண்ணின் உடல் கிடந்த இடத்தின் அருகில் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டாப்ஸ் ஒன்று கிடந்துள்ளது.
இதனை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த கொலை தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் டாஸ்மாக் கடைக்கு நேர் எதிரே உள்ள காப்புக் காட்டில் இந்த கொலை நடந்திருப்பதால் மதுப் பிரியர்கள் யாரேனும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.