டீக்கடைக்காரர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரை அடித்துக் கொன்ற சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் பகுதியைச் சார்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி சுகுமார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்துபவர் செந்தில். இந்நிலையில் செந்தில் நேற்று முன்தினம் காலை டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சுகுமார் நடந்து வந்து கொண்டிருக்கும் போது திடீரென செந்தில் கட்டையை எடுத்து சுகுகுமாரை தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனால் சுகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதன்பின் சுகுமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் தப்பி ஓடிய செந்தில் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து செந்திலை தீவிரமாக தேடி வருகின்றனர்.