விவசாயியை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மட்டப்பாறை கிராமத்தில் சடையன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு துருர் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கோவில் கட்டுவதற்காக அப்பகுதி பொதுமக்கள் சடையனிடம் கேட்டுள்ளனர். அதன்படி சடையனும் ஊர் பொதுவில் வைத்து அந்த நிலத்தை கோவிலுக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். அவ்வாறு கிரையம் செய்து கொடுத்த நிலத்தின் அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தை சடையன் அனுபவித்து வந்துள்ளார். அவர் அங்கு விவசாய பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
அப்போது துருர் கிராமத்தைச் சேர்ந்த சின்னபையன், பழனி, மூர்த்தி ஆகிய 3 பேரும் சடையன் அனுபவித்து வந்த புறம்போக்கு நிலத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் குழி தோண்டியுள்ளனர். இதனை கண்டதும் சடையனும் அவருடைய மகன் ஆசை தம்பியும் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சின்னத்தம்பியும் அவருடன் இருந்த இரண்டு பேரும் சடையனை கல்லால் அடித்துள்ளனர்.
இதை தட்டிகேட்ட ஆசைதம்பியையும் அடித்துள்ளனர். இந்த தாக்குதலில் சடையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடையனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சின்ன பையன், பழனி, மூர்த்தி ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.