அரியலூர் அருகே அரை பவுன் தங்க நகைக்கு ஆசைப்பட்டு 80 வயது பாட்டியை கொலை செய்த 14 வயது சிறுவன் சிறை சென்றுள்ளான்.
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை அடுத்த குவாகம் காலனி பகுதியில் வசித்து வந்தவர் சிவகாமி. இவரது கணவர் இறந்த நிலையில், அவரது மகளான கலைச்செல்வி, அம்பிகா, இளவரசி, பானுமதி ஆகியோரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 80 வயது மூதாட்டியான சிவகாமி , குவாகம் காவல் நிலையம் அருகே தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால்,
காவல்துறையினர் சந்தேக வழக்காக பதிவு செய்து, மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளது. தெரிய வந்ததையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்தி அவரது வீட்டில் இருந்த நூறு ரூபாயையும் அவரது காதிலிருந்த அரை பவுன் தங்கத்தோடும் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் குறித்து விசாரித்து வந்த நிலையில்,
14 வயது சிறுவன் ஒருவன் சிக்கினான். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், அரை பவுன் தங்க நகைக்காக கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். பின் திருடிய நகையை தந்தையிடம் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்ததையடுத்து, சிறுவனை கைது செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். பின் அவரது தந்தையிடமிருந்து நகையை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் தந்தைக்கு எட்டு குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.