புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடைக்காரர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் சிவசாமி என்பவர் இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகில் உள்ள புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயபாலனின் மகன் காசிராஜன் தனது இரு சக்கர வாகனத்தை அந்த புறம்போக்கு நிலத்தில் நிறுத்தியுள்ளார்.
இதனை கண்ட சிவசாமி ஆத்திரமடைந்து ஜெயபாலனிடம் தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு ஜெயபாலன் மற்றும் அவருடைய மகன்கள் பாண்டியராஜன், காசிராஜன், செல்வராஜன், சின்னராஜன் ஆகியோர்கள் இணைந்து அரிவாளை எடுத்து சிவசாமியை வெட்டியுள்ளனர். இதனை தடுக்க வந்த சிவசாமியின் மகன் சிவக்குமாரும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
இதனை அடுத்து அருகிலிருந்தவர்கள் இவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் சிவசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிவகுமாருக்கு அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி ஜெயபால் மற்றும் அவருடைய நான்கு மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பின்னர் பாண்டியராஜன் மற்றும் செல்வராஜன் ஆகியோர் மட்டும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவான இரண்டு பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.