நாமக்கல் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வசித்து வருபவர் கோடீஸ்வரன். இவர் முதுகலை பட்டதாரி ஆவார். இவரது அண்ணன் ஆசிரியராக பணியாற்றி வரும் சூழ்நிலையில், அவரை விட நல்ல பணியில் சேர்ந்து நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இவருக்குள் இருந்துள்ளது. ஆனால் அது நடக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன விரக்தியில் நேற்றைய தினம் மாலை முதலில் போனை போட்டு உடைத்துள்ளார். அதன்பிறகு ஆத்திரம் அடங்காத அவர் தன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு வெளியே சென்று அவர் வீட்டின் அருகே இருந்த கதவுகளை அரிவாளால் வெட்டினார்.
அதன்பிறகு அவரை சமாதானப்படுத்த முயன்ற அவரது பெரியப்பா மற்றும் அத்தை ஆகியோரை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த அத்தை லட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து அப்பகுதி வழியாக வியாபாரம் செய்ய வந்த வியாபாரி ஒருவரையும் அவர் வெட்டிவிட்டு பிறகு அனைவரும் ஓடி ஒளிந்து கொண்டதால், கோடீஸ்வரன் ஒரு வீட்டிற்குள் சென்று தாழிட்டு பதுங்கிக் கொண்டான்.
பின் இதுகுறித்து காவல் நிலைத்தில் தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கதவை உடைத்து கோடிஸ்வரனை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், வேலைக்காக வெளிநாடு செல்ல நினைத்து அதற்காக சுமார் 12 லட்சம் தொகையை நாமக்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கொடுத்ததாகவும், ஆனால் அவர் பணத்தை வாங்கிவிட்டு கோடீஸ்வரன் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் எதையும் செய்யவில்லை எனவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த வெறிச்செயலை அவர் நிகழ்த்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.