வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள பொதும்பு பகுதியில் ஸ்ரீகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீகண்டன் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டையில் நடைபெற்று வந்த காங்கிரீட் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அங்கு சக தொழிலாளியான ஜெயராஜ் என்பவரும் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் வருடம் ஜூலை 6-ஆம் தேதி அன்று ஸ்ரீ கண்டனும், ஜெயராஜூம் மது அருந்தி விட்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஜெயராஜ் அங்கிருந்த ரேடியோவில் பாடலை சத்தமாக வைத்து கேட்டுக் கொண்டிருந்த போது இடையூறாக இருப்பதாக ஸ்ரீகண்டன் தகராறு செய்துள்ளார்.
இதனையடுத்து ஸ்ரீகண்டன் ரேடியோவை இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கியுள்ளார். மேலும் ஜெயராஜையும் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயராஜ் கீழே கிடந்த கல்லை எடுத்து ஸ்ரீ கண்டனின் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீகண்டன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்ரீகண்டனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்த வழக்கு கோவையில் உள்ள கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலன் ஜெயராஜுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2500 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.