திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை அடுத்த சாஸ்தா நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் சரஸ்வதி. இவர் நெல்லையில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள குழாயடியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த அவரது உடன் பிறந்த அண்ணன் குட்டி தாஸ், திடீரென அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, தான் மறைத்து வைத்திருந்த, அரிவாளை எடுத்து தங்கை என்றும் பாராமல், சரஸ்வதியை சரமாரியாக வெட்டி உள்ளார்.
பின் இதுகுறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தங்கையை கொலை செய்த அண்ணன் ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் காவல் நிலையம் சென்று சரணடைந்தார்.
பின் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தன் தங்கை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தனது தையல்கலையாலும், டவுனுக்கு சென்று கவரிங் நகைகளை வாங்கி வந்து கிராமத்தில் விற்பனை செய்து வந்ததாலும் அதிகமான பணத்தை சம்பாதித்தால், சிறு வயதிலேயே, படிக்கும் போதே அதிகமாக பணம் ஈட்டியதால் உடன்பிறந்த அண்ணனான என்னை அவள் மதிக்கவில்லை. மேலும் செல்போனில் சிலரிடம் பேசிக் கொண்டிருந்ததை நான் கண்டித்துள்ளேன்.
இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு நடந்ததுண்டு. வழக்கம்போல், சம்பவ தினத்தன்று தங்கையிடம் செலவுக்கு பணம் கேட்டேன். அவள் தர மறுத்ததுடன், என்னை அவதூறாக பேசி விட்டாள். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்தேன் என பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் அவரை நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.