இளம்பெண்ணின் வாயில் விஷத்தை ஊற்றி கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெட்டவாலத்தை சேர்ந்தவர் ராமன் இவர் மகள் ஜோதி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ரவி-சரஸ்வதி தம்பதியினர் மற்றும் அவரது தம்பி குமாரகிருஷ்ணன். ராமன் விவசாய நிலமும் ரவியின் விவசாய நிலமும் அருகருகே இருந்த நிலையில் இரு குடும்பத்தினருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை ஜோதி வீட்டில் இருந்து வெளியில் வந்த சமயம் ரவி மற்றும் குடும்பத்தினர்கள் ஜோதியிடம் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் ஜோதியை பிடித்து வீட்டில் இருந்த பூச்சி மருந்தை கொண்டு வந்து ஜோதியின் வாயில் ஊற்றி உள்ளனர். இதனால் ஜோதி கத்தி கூச்சலிட்டு உள்ளார்.
மகளின் சத்தம் கேட்டு வெளியில் வந்த ராமன் மகளின் வாயில் பூச்சிமருந்து ஊற்றுவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ராமன் வருவதை பார்த்து ரவி, ரவியின் மனைவி மற்றும் தம்பி அங்கிருந்து ஓடிவிட்டனர். வாயில் விஷம் ஊற்றிய காரணத்தினால் ஜோதி மயங்கி உள்ளார். அவரை மீட்ட தந்தை ராமன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ராமன் வெட்டவளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.