எலும்பு முறிவு சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு வந்தவரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள கீழசொக்கநாதபுரம் பகுதியில் ஒண்டிவீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிக்குமார் என்ற ஒரு மகன் உள்ளார். ரவிக்குமார் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கோழிப்பண்ணையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் ரவிக்குமாருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட காரணத்தால், சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு கடந்த வாரம் வந்திருந்தார். அப்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமார், மோட்டார் சைக்கிளில் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றிருக்கிறார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் ரவிக்குமார் வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைத்து இடங்களில் தேடி பார்த்தனர்.
அப்போது ஊரின் பின்புறமுள்ள பகுதியில் ரவிக்குமார் அரிவாளால் வெட்டப்பட்டு சடலமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போடி டவுன் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி பார்த்திபன் ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து ரவிக்குமார் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.