இருவருக்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் நண்பரை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள சிக்கண்ணா கல்லூரி ஐந்தாவது வீதியில் மூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருப்பூரில் பணியாற்றி வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்ற நண்பர் உள்ளார். இந்த நண்பர்கள் இருவரும் சேர்ந்து பனியன் தொழில் தொடர்பான பாலி பேக் நிறுவனத்தை தொடங்க முடிவு செய்து கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி அந்த புதிய நிறுவனத்தை துவங்கி விட்டனர். இந்த புதிய நிறுவனத்தில் அரவிந்த் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்த நிலையில், மூர்த்தி பணம் கொடுக்காமல் நிறுவனத்தில் பங்குதாரராக செயல்பட்டது அரவிந்துக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மூர்த்தியிடம் அரவிந்த் அடிக்கடி பணம் கேட்டதால் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த நிறுவனத்தில் அரவிந்தும், இரண்டு ஊழியர்களும் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது மூர்த்தி அங்கு சென்றுள்ளார். அதன்பின் அரவிந்த் மூர்த்தியிடம் நிறுவனத்திற்கு உரிய பணத்தை கேட்டபோது மீண்டும் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோபமடைந்த அரவிந்த் அங்கு கிடந்த கத்தியை எடுத்து மூர்த்தியின் கழுத்தை அறுத்து விட்டார். இதனால் சம்பவ இடத்திலேயே மூர்த்தி துடிதுடித்து இறந்து விட்டார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய அரவிந்தை வலைவீசி தேடி வருகின்றனர்.