கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் மற்றொருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கரிகாலம் பாடி கிராமத்தில் பழனி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு விருதம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் 2 பேரும் திருப்பூரில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பழனி திடீரென உடல்நலம் சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து விருதம்மாளுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பழனி விருதம்மாளை கண்டித்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பழனி தன்னை கொடுமைப்படுத்துவதாக விருதம்மாள் ராஜியிடம் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலை கோவில் பக்கமாக பழனியும் விருதம்மாளும் கடந்த 2009ஆம் ஆண்டு சென்றுள்ளனர். அப்போது ராஜியும் விருதம்மாளும் சேர்ந்து பழனியின் கழுத்தை நெரித்து அவரை கொலை செய்து விட்டு கல்லாவி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இந்த வழக்கானது கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி விருதம்மாளுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ராஜிக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.