காதலித்த பெண் திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் தன் நண்பனோடு சேர்ந்து அவளைக் கொலை செய்த காதலனை காவல் துறையினர் சிறைபிடித்தனர்.
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகில் இரண்டு நாட்களுக்கு முன்பதாக அழுகிய நிலையில் ஒரு இளம்பெண்ணின் சடலம் கிடைத்தது. அது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் தென்னம்பட்டி யை சேர்ந்த ஜெயஸ்ரீ என்று தெரியவந்தது. ஜெயஸ்ரீ தனியார் மில் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவர் உடலை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில் ஜெயஸ்ரீ கழுத்து நெரிந்து கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டது.
காவல்துறையினர் ஜெயஸ்ரீயின் கைபேசி எண்ணை வைத்து விசாரணை நடத்தினர் அதில் அவர் பழனியில் உள்ள கோம்பைபட்டி பகுதியை சேர்ந்த தங்கதுரை என்னும் நபருடன் பேசி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தங்கதுரை என்பவரின் கைபேசி எண்ணையும் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின்போது ஜெயஸ்ரீயை கொலை செய்ததை தங்கதுரை ஒப்புக்கொண்டார். போலீசார் இது குறித்து தெரிவிக்கையில் ஜெயஸ்ரீ மற்றும் தங்கதுரை இருவரும் ஒரே மில்லில் வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது பின் காதலாக மாறியது. ஜெயஸ்ரீயை தங்கதுரை நிறைய இடங்களுக்கு அழைத்து சென்று வந்துள்ளார்.
இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஜெயஸ்ரீ வற்புறுத்தியுள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆதலால் வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார் தங்கதுரை. ஆனால் ஜெயஸ்ரீ மீண்டும் மீண்டும் அவரை வற்புறுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து தனது நண்பரான ஜெகநாதன் உடன் சேர்ந்து ஜெயஸ்ரீயை கொலை செய்ய தங்கதுரை திட்டமிட்டுள்ளார். திட்டத்தின்படி 1ஆம் தேதி ஒட்டன்சத்திரத்திற்கு வருமாறு ஜெயஸ்ரீயை அழைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து வாகரை என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் தங்கதுரை.
ஜெயஸ்ரீ அவர் சொன்ன இடத்திற்கு வந்ததும் கழுத்தை நெரித்து அவரைக் கொன்றுவிட்டு உடலை புதருக்குள் மறைத்து போட்டு விட்டு சென்றுள்ளனர். இரண்டு நாட்கள் கழித்தவுடன் அப்பகுதியில் துர்நாற்றம் வீசவும் மக்கள் காவல்துறைக்கு தெரிவித்தனர். ஜெயஸ்ரீ கொலை செய்யப்பட்டது அறிந்ததும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் அப்போது அங்கு வந்த மில் வாகனத்தையும் தனியார் பேருந்தையும் கல்வீசி தாக்குதல் நடத்தினர் அதனைத் தொடர்ந்து காவலர்கள் அவர்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினார்கள். அதைப் போன்று கல்வீச்சில் ஈடுபட்ட 6 பேரை சிறை பிடித்தனர்.