நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையை துண்டித்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகே தாழையூத்து குறிச்சிகுளத்தை சேர்ந்த சொரிமுத்து. இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். 14 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் ரம்லத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு குறிச்சிகுளத்திற்கு அழைத்து வந்து வாழ்ந்து வந்துள்ளார். சொரிமுத்து கேரளாவிலேயே பணிபுரிந்து வந்ததால் அடிக்கடி கேரளாவிற்கு சென்று விடுமுறை கிடைக்கும் பொழுது வீட்டிற்கு வந்துள்ளார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும் 12 வயதில் ஒரு மகனும் இருந்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் தொடங்கியதைத் தொடர்ந்து கேரளாவில் இருந்து வீட்டிற்கு வந்த சொரிமுத்து குடும்பத்தினருடன் குறிச்சிக்குளத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் ரம்லத் இரவு நேரங்களில் செல்போனில் அடிக்கடி பேசியதனால் சொரிமுத்துக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மனைவியின் நடத்தையை கண்காணித்த அவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் தனது மனைவிக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக கருதியுள்ளார். இதனை தொடர்ந்து சொரிமுத்து மனைவியை கண்டிக்க கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 4ஆம் தேதியும் இருவர் இடையே தகராறு ஏற்பட கோபம் கொண்டு வீட்டை விட்டு ரம்லத் வெளியேறியுள்ளார். மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சொரிமுத்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சொரிமுத்து ரம்லத் தம்பதியின் ஒரு மகனுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனதை தொடர்ந்து இதனை அறிந்த ரம்லத் சொரிமுத்துவை செல்போனில் அழைத்து பேசியுள்ளார்.
அப்போது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என சொரிமுத்து சொல்ல மகனை பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார் ரம்லத். அதற்கு சொரிமுத்து நான் கேரளாவில் இருந்து வந்ததால் நெல்லை மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக வந்துள்ளேன். அங்கு வந்தால் இரண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்குப் போய்விடலாம் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி ரம்லத் நெல்லை அரசு மருத்துவமனைக்கு செல்ல அங்கிருந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளனர். நள்ளிரவில் குறிச்சிக்குளம் பகுதி வந்தவுடன் சொரிமுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு முட்புதருக்குள் தனது மனைவியை அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டி கோபம் தீராமல் மனைவியின் தலையை துண்டித்து உள்ளார். ரத்தவெள்ளத்தில் ரம்லத் துடிதுடித்து இறந்து போனார். பின்னர் மறுநாள் காலை சொரிமுத்து காவல் நிலையத்தில் சரண் அடைந்து நடந்தவற்றை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் ரம்லத் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.