வாலிபர்கள் இணைந்து தனது சகோதரரின் கொலைக்கு பழி வாங்குவதற்காக அண்ணியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள குருசாமி நகர் பகுதியில் ரூபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்ரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஆறு மாத காலமாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் சுப்ரியாவிடம் தனியாக பேசவேண்டும் என்று கூறி ரூபனின் சகோதரர்களான சுதாகர், பிரேம்குமார், ராம்குமார், தினகரன் போன்றோர் இரவு 9 மணிக்கு மேல் குருசாமி நகர் 9 வது தெருவில் உள்ள நடு பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அப்போது திடீரென அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்ரியாவின் கழுத்து, தலை போன்ற பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன்பின் சுப்ரியாவின் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த பேசின்பிரிட்ஜ் காவல்துறையினர் சுப்ரியாவின் உடலை கைப்பற்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் கடந்த செப்டம்பர் மாதம் மர்ம கும்பல் புளியந்தோப்பில் வைத்து ரூபனின் சகோதரரான ரமேஷ் என்பவரை வெட்டி கொலை செய்ததும், அந்த கொலைக்கு சுப்ரியா மூளையாக செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த ரமேஷின் சகோதரர்கள் பழிவாங்குவதற்காக சுப்ரியாவை கொலை செய்துள்ளனர். இதனையடுத்து ரூபனை கைது செய்த காவல்துறையினர் அவரது சகோதரர்கள் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.