தங்க நகைகளுக்கான பெண்ணின் கை, கால்களை கட்டி கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை சவுகார்பேட்டையில் பைனான்சியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி உள்ளார். இவர்களின் மகன் பூனேவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்களது வீட்டின் காவலாளியாகவும், வீட்டு வேலைகளை பார்க்கவும் பெங்களூருவில் வசித்துவரும் ராகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து ரவி, கலாவை நீண்ட நேரமாக செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் அவர் செல்போனை எடுக்காததால் சந்தேகமடைந்த ரவி வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளார். அப்போது கை, கால்கள் கட்டப்பட்டு கழுத்தை அறுத்த நிலையில் கலா கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி வீட்டில் சோதனை செய்தபோது ராகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரையும் காணவில்லை.
மேலும் கலா அணிந்திருந்த தங்க நகைகள் மாயமாகி இருந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாதவரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்தபோது கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த ராகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கலாவை கொடூரமாக கொன்று வீட்டில் இருந்த 10 பவுன் தங்க நகையை திருடிவிட்டு தப்பி சென்றது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காவலாளியையும் அவரது குடும்பத்தினரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.