நாசரேத் அருகே உள்ள வைத்தியலிங்க புரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் இவரது மகன் சண்முகசுந்தரத்திடம் உடையார்குளம் காந்திநகர் தெற்கு தெருவை சேர்ந்த பலவேசம்(60) என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டுப் பத்திரத்தை கொடுத்து சுமார் 40,000 கடன் பெற்றுள்ளார்.
பின்னர் அந்த கடனை பலவேசம் திருப்பிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சண்முகசுந்தரம் கூடுதலாக பணம் கேட்டு பலவேசத்தை மிரட்டி வந்ததாகவும், மேலும் அவர் அடமானம் வைத்த வீட்டுப் பத்திரத்தை திருப்பிக் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது,
இதுதொடர்பாக பலவேசம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தனது மருமகனான தங்கராஜ்யிடம் (26) கூறியுள்ளார். இதையடுத்து தங்கராஜ் தன்னுடைய மனைவி முத்துலட்சுமி மற்றும் 2 வயது பெண் குழந்தையுடன் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் பலவேசம், தங்கராஜ் ஆகிய இருவரும் நாசரேத் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் செய்துள்ளனர். அதன்பேரில் போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டம், மோசடி செய்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சண்முக சுந்தரத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சண்முகசுந்தரத்தின் உறவினர்களான வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ், செல்லத்துரை, ஞானசுந்தர், பாரதி, செந்தில், முத்துகுமார் ஆகிய 6 பேரும் இரவில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் உடையார்குளம் காந்திநகரில் உள்ள பலவேசத்தின் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் பலவேசத்தை சரமாரியாக வெட்டினர்.
இதை தடுக்க முயன்ற பலவேசத்தின் மருமகன் தங்கராஜயும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர் . 2 பேரும் படுகொலை செய்யப்பட்டதை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டதால் பதற்றம் நிலவியது. இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து நாசரேத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் இந்த பயங்கரமான இரட்டை கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் தப்பியோடிய 6 பேரை 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.