போலந்தில் முகக் கவசம் அணியாமல் சென்ற நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் 20 வருடங்களாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி என்று தெரியவந்திருக்கிறது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தலைநகருக்கு வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு அங்காடியில் ஒரு நபர் முகக் கவசம் அணியாமல் சென்றதால் கைது செய்யப்பட்டார். 45 வயதுடைய அந்த நபர் 20 வருடங்களுக்கு முன் கொலை செய்திருக்கிறார்.
அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் காவல்துறையினரிடம் மாட்டாமல் தப்பித்து விட்டார். இருபது வருடங்களாக பதுங்கி தலைமறைவாக இருந்திருக்கிறார். தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது.
எனவே, நாடு முழுக்க விதிமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் முகக் கவசம் அணியாமல் அந்த நபர் சென்றதால், காவல்துறையினரிடம் மாட்டினார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் கொலை குற்றவாளி என்று தெரியவந்தது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு 25 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.