தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிவரும் நடிகை நயன்தாரா, தனது உழைப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். ஐயா படத்தில் அறிமுகமானாலும் ரஜினிகாந்த்துடன் சேர்ந்து ‘சந்திரமுகி’ படத்தில் காதல், ரொமான்ஸ் காட்சிகளில் வசீகரித்து பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்தார்.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து பிரபலமானார். கோலிவுட், டோலிவுட் என கலக்கிவரும் நயன்தாரா இன்று ஒரு மாஸ் ஹீரோக்களின் என்ட்ரிக்கு நிகராக பேசப்படுகிறார். ஒரு பெண் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பது பாராட்டக்குரியதாகும்.
இவர், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளைத் தேர்வு செய்து நடித்துவந்தாலும் அவ்வப்போது முன்னணி நடிகர்கள் படத்திலும் நடித்துவருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் விஜய்யுடன் இவர் நடித்த பிகில் திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்தார். இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகை தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக ஊடகங்களில் தலைகாட்ட மறுக்கும் நயன்தாரா, அண்மையில் வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இதில், இயக்குநர் முருகதாஸை பற்றி கடுமையாகப் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அப்பேட்டியில், “கஜினி படத்தில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில் மருத்துவ மாணவியாக நடித்திருந்தேன். கஜினி படக் கதையை தன்னிடம் கூறும்பொழுது, நடிகை அசினுக்கு நிகரான கதாபாத்திரம் என்றுதான் கூறியிருந்தார். ஆனால், படம் ரிலீசான பிறகு எனது கதாபாத்திரம் டம்மியாக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதன்மூலம் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்.
அதிலிருந்து கதைக் கேட்பதில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினேன். 15 ஆண்டு சினிமா வாழ்க்கையில், நான் மறக்க நினைக்கும் திரைப்படம் கஜினிதான்” என்று தெரிவித்துள்ளார். ஒரு பக்கம் இயக்குநர் முருகதாஸை குற்றஞ்சுமத்தும் நயன்தாரா, அவர் இயக்கத்தில் உருவான தர்பார் படத்தில்தான் தற்போது நடித்துவருகிறார்.
இதேபோல், சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நயன்தாரா சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் அவரது கதாபாத்திரம் பேசப்படும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. தமன்னாவிற்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.மேலும், நடிகர் ராம் சரணின் மனைவி, தமன்னாவிற்கு வைர மோதிரம் பரிசாக அளித்து நயன்தாராவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.