முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து செல்ல அனுமதி இல்லை என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டதாவது முருகன் மற்றும் அம்மன் கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செல்ல வேண்டும். அப்படி இல்லையென்றால் 3 வது அலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தற்போது கோவில்களில் குடமுழுக்குகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் சாமியை தரிசனம் செய்ய வேண்டும். அதன்பின் பக்தர்கள் தேங்காய், பழம் செலுத்தி அர்ச்சனை செய்யவும், கோவில் நுழைவாயிலின் முன் கடைகள் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் வேலூர் மாவட்டத்தில் முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து செல்ல அனுமதி இல்லை. அதேபோன்று கோவிலுக்குள் பொங்கல் வைக்கவும், அங்கப்பிரதட்சனம், அழகு குத்தி பிரார்த்தனை செய்யவும் மற்றும் இதர பிரார்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இதனைதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும், கோவிலின் வெளிப் பகுதிகளில் பக்தர்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி உணவு பொட்டலங்களை வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஆடல் நிகழ்ச்சி, கச்சேரி, பஜனை, நாடகம் போன்றவை நடத்த தடை விதிக்கப்படுகிறது எனவும், பக்தர்கள் ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதில் கூறப்பட்டிருக்கும் நெறிமுறைகளை கடைபிடிக்கவில்லையென்றால் அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்படி அபராதம் விதித்து வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.