சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கொண்டுவந்த 3 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரளம் ரயில்வே கேட் அருகில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ஆட்டோவில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து ஆட்டோவில் வந்த 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் நீடாமங்கலத்திலிருந்து கொல்லுமாங்குடிக்கு புகையிலை பொருட்கள் கொண்டு வருவதாக காவல்துறையினரிடம் தெரிவித்தனர். அதன்பின் அவர்களிடம் இருந்த 612 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.