தமிழகத்தில் கொரோனா நிவாரண பணிகளுக்காக பல்வேறு பிரபலங்கள் ,தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நிதியுதவி வழங்கி வருகின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 ம் அலை வேகமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்திலும் இதன் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. அதேசமயம் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா நிதி நிவாரணப் பணிகளுக்காக தமிழக முதலமைச்சர் , பொதுமக்களுக்கு தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதை அடுத்து பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ,தங்களால் முடிந்த தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் ,கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதிஉதவி வழங்கி உள்ளார். அவர் முதலமைச்சர் நிவாரண நிதியின் மூலமாக ரூபாய் 1 லட்சம் வழங்கியுள்ளார். இவர் இந்த ஆண்டு வருகின்ற ஜூலை மாதம் ,டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.