மூதாட்டியின் முதியோர் உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டதால் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தில் முனியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாக தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் இவருக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தனது கிராமத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் நிலையில், தனக்கு மட்டும் உதவித்தொகை வழங்காததினால் தபால் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம், வங்கி உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று தனக்கு உதவி தொகை ஏன் வரவில்லை என கேட்டு மூதாட்டி அலைந்து வந்திருக்கிறார். அதன்பின் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவில் விசாரித்த நிலையில், இவர் இறந்து விட்டதாக அறிக்கை பெறப்பட்டு முதியோர் உதவித் திட்டத்தின் பெயர் பட்டியலில் இருந்து முனியம்மாள் நீக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி அதிகாரிகளிடம் இது பற்றி கேட்ட போது அவர்கள் கிராம நிர்வாக அலுவலரை பாருங்கள் என கூறி அனுப்பி வைத்திருக்கின்றனர். இதனையடுத்து முனியம்மாள் இது பற்றி கிராம நிர்வாக அலுவலரிடம் நேரில் சென்று கேட்ட போது உங்கள் ஆதார் கார்டு தவறாக இருந்து அதனால் உதவித்தொகை நிறுத்தப்பட்டு இருக்கலாம் எனவும், புதிதாக விண்ணப்பம் செய்யுங்கள் எனக் கூறியிருக்கிறார். பின்னர் அவர் மீண்டும் புதிதாக அளித்த மனுவின் மீது கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல் அளித்து வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பிய நிலையில், வருவாய் ஆய்வாளர் சுபலபிரியா ஒரு மாதம் விடுமுறையில் சென்றதால் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுபலபிரியா தனது விடுமுறைக்குப் பின் ஒப்புதல் வழங்கி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாருக்கு அனுப்பி வைத்த மனு உரிய காரணங்கள் இன்றி நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிறகு உயிருடன் இருப்பவர் இறந்து விட்டார் என தவறான அறிக்கை கொடுத்து உதவி தொகை நிறுத்தப்பட்டு மீண்டும் மனு அளிக்க சொல்லி அந்த மனுவையும் நிராகரிக்க வேண்டிய அவசியம் என்ன, வேறு ஏதேனும் உள்நோக்கத்துடன் நிராகரிக்கப்பட்டுள்ளதாக என மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அதிகாரிகள் செய்த தவறால் கடந்த நவம்பர் மாதம் முதல் மூன்று மாதங்களாக உதவித்தொகை நிறுத்தப்பட்டு மிகவும் சிரமத்திற்கு இடையில் உயிருடன் தான் இருந்து வருகின்றேன் இழந்து விடவில்லை என மூதாட்டி தெரிவித்துள்ளார். ஆதலால் உதவித் தொகையை கொடுக்க செய்யுமாறு முதலமைச்சரின் தனிப்பிரிவில் மூதாட்டி புகார் அளித்துள்ளார்.