ஆடு திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராயம்புரம் பகுதியில் கோவிந்தராசு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் கோவிந்தராசு தனது ஆடுகளை மேய்ப்பதற்கு அப்பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தில் வாலிபர் ஒருவர் ஒரு ஆட்டை திருடி சென்று விட்டார். இதனை அறியாத கோவிந்தராசு தனது ஆடுகளை வீட்டிற்கு ஓட்டிச் சென்ற போது ஒரு ஆடு மட்டும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து அப்பகுதி முழுவதும் தேடியும் அது கிடைக்கவில்லை.
இதனால் கோவிந்தராசு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கோவிந்தராசு ஆடுகளை வாங்கி விற்பனை செய்பவரிடம் விசாரித்தால் ஏதாவது தகவல் கிடைக்கும் என்று நினைத்து விசாரித்துள்ளார். அப்போது ஆடு திருடி சென்ற வாலிபர் உச்சினி கிராமத்தில் வசிக்கும் ராமு என்பவரிடம் ஆட்டை விற்பனை செய்ததை அறிந்த கோவிந்தராசு அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்களுடன் இணைந்து அங்கு சென்றுள்ளார். அப்போது ஆட்டை திருடி சென்ற வாலிபரை கோவிந்தராசும், இளைஞர்களும் இணைந்து கையும், களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் பொய்யாநல்லூர் பகுதியில் வசிக்கும் சரவணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சரவணன் தொடர்ந்து இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், இவரின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.