மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்தவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி கீழ முதல் தெருவில் சர்வானந்தன் மனைவி மாரியம்மாள் வசித்து வருகின்றார். கடந்த 22-ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் மாரியம்மாளின் தலையில் அரிவாளால் வெட்டி விட்டு அவர் அணிந்திருந்த 3 1/2 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றார். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் “மாரியம்மாளின் வீட்டு பக்கத்தில் உலகநாதன் மனைவி ராணி வசித்து வருகிறார். இவர் அங்கன்வாடியில் சமையல் வேலை செய்து வருகின்றார். இவருடைய கணவர் 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனால் ராணி தனது 2 குழந்தைகள் மற்றும் தாயாருடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் ராணி தன் கடன் பிரச்சினையை சமாளிப்பதற்காக தனியாக வசித்து வரும் மாரியம்மாளிடம் இருந்து சங்கிலியை பறிக்க மீனாட்சியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவருடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். அதன்படி கார்த்தி கடந்த 22-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த மாரியம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அவர் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்துச் சென்றார். இந்த சம்பவத்திற்கு உடந்தையாக ராணி இருந்துள்ளார்.
இந்த விவரங்களை கார்த்திக் மதுபோதையில் தனது நண்பர் ஒருவரிடம் உளறியுள்ளார்” என்று தெரியவந்தது. இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக கார்த்தி, ராணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மாரியம்மாளை வெட்ட பயன்படுத்திய அரிவாள் மற்றும் சங்கிலியை காவல்துறையினர் கார்த்தியிடம் இருந்து கைப்பற்றினர். இவ்வாறு இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் உள்ளிட்ட காவல்துறையினரை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன் பாராட்டினார்.