பணத்துக்காக மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள கெழுவத்தூர் மூளைக்கால் தெருவில் கேசவமூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு நாகம்மாள் (வயது 60) என்ற மனைவி இருந்தார். இதில் கேசவமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் நாகம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நாகம்மாள் வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து நாகம்மாளின் அண்ணன் மகன் சிவசாகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த நாகம்மாளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பிரேத பரிசோதனை முடிவில் நாகம்மாள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் “நாகம்மாள் 2 ஏக்கர் நிலத்தை சாகுபடி செய்து வந்தார். அப்போது நாகம்மாளிடம் பணம் இருந்துள்ளது. இவரிடம் பணம் இருப்பதை தென்கோவணூரை சேர்ந்த நாகம்மாளின் அக்காள் மகன் ராஜ்குமார் கண்காணித்து வந்துள்ளார். மேலும் ராஜ்குமார், நாகம்மாளிடம் இருந்த பணத்தை அடிக்கடி கேட்டு தொல்லை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் மீண்டும் நாகம்மாளிடம் பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு நாகம்மாள் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் தன் நண்பர் வாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த மருதுபாண்டி என்பவருடன் சேர்ந்து நாகம்மாளை கழுத்தை நெரித்துக் கொலை செய்தது” காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜ்குமார், மருதுபாண்டி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.