பஞ்சாபில் 75 வயது முதியவர் இளைஞர்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வர சாதனை ஒன்றை புரிந்துள்ளார்.
சமீபத்திய இளைஞர்கள் போதைப் பொருளில் தான் அதிகம் இன்பம் இருப்பதாக நினைத்துக்கொண்டு அதற்கு தங்களை அடிமையாக்கிக் கொண்டு உடலை சீரழித்து வருகின்றனர். இவர்களை மீட்டெடுப்பதற்காக சமூக ஆர்வலர்களும், நமது அரசும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்,
ஒரு முதியவர் இளைஞர்களை இந்த போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்காக இரண்டு மாதங்களாக கஷ்டப்பட்டு ஒரு சாதனை புரிந்துள்ளார். அது என்னவெனில், பஞ்சாபின் லூதியானா பகுதியைச் சேர்ந்த சத்னம் சிங் என்ற 75 வயது முதியவர் 10 டன் எடை கொண்ட லாரியை தனது தோளால் இழுத்து அசத்தியுள்ளார். இதனை நிகழ்த்த தனக்கு இரண்டு மாத காலம் பயிற்சி தேவைபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் 75 வயதாகும் என்னால் இந்த லாரியை இழுக்க முடிந்ததற்குக் காரணம் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. எந்த கெட்ட பழக்கத்திற்கும் நான் அடிமை ஆகாமல் மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாகவே இந்த சாதனையை புரிந்துள்ளேன். இளைஞர்களும் அனைத்து கெட்டப் பழக்கங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு தங்களது வாழ்க்கை இலட்சியங்களில் கவனம் செலுத்தினால் லாரி என்ன மலையை கூட இழுக்கலாம் என்று தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.