புதுஆறு கிளை வாய்க்காலில் குளித்தபோது வாலிபர் சுழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாமந்தான்குளம் பகுதியில் நாகமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருந்தார். இவர் தஞ்சை கீழவீதியில் உள்ள ஒரு டீக்கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ரமேஷ் தனது நண்பர்களுடன் புதுஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் நெய்வாசல் கிளை வாய்க்கால் பிரிவு பகுதிக்குச் சென்றார். அங்கு ரமேஷ் வாய்க்காலில் குதித்து குளித்து கொண்டிருந்தார்.
அப்போது வாய்க்காலில் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை அருகே ரமேஷ் சென்றபோது நீர்ச்சுழலில் சிக்கிக் கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கரைக்காவலர்கள் மூலம் புது ஆற்றிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தண்ணீர் குறைந்த பிறகு சுழலில் சிக்கி இறந்த ரமேஷ் சடலத்தை சிறப்பு நிலைய அலுவலர் பொய்யாமொழி மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.
இதனை அறிந்த தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சுழலில் யாரும் சிக்கி இறந்து விடக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி பல பேர் அங்கு குளித்து வருகின்றனர். இதற்கு முன்பாக முதியவர் ஒருவர் ரமேஷ் அங்கு குளிப்பதற்கு எச்சரிக்கை விடுத்தும் அவர் மீறி குளித்ததால் தற்போது இறந்து இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.