பெற்ற மகனே இரக்கம் இல்லாமல் வயதான தாயை முட்புதரில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ,ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏலியம்பேடு என்ற கிராமத்திற்கு செல்லக்கூடிய வழியில் முள் செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. அந்தப் பகுதி மக்கள் சிலர் அவ்வழியாக சென்று கொண்டிருந்தபோது அந்த முட்செடி புதரிலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டு உள்ளது. இந்நிலையில் அந்த சத்தத்தை கேட்ட அவர்கள் அந்த முட்செடி புதருக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஒரு மூதாட்டி இரண்டு கால்களும் செயலிழந்து நடக்கமுடியாத நிலையில் அழுது கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். உடனே அப்பகுதி மக்கள் அந்த மூதாட்டியை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் இந்த மூதாட்டியின் பெயர் காந்திமதி என்பதும் இவர் சென்னை மணலி பெரிய சேர்க்காடு கிராமத்தில் வசித்து வருவதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் மூதாட்டியான காந்திமதிக்கு ரவி மற்றும் சங்கர் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர் என்றும் தெரியவந்தள்ளது. அதில் ரவி என்பவர் கொத்தனார் வேலை செய்பவர் என்றும் சங்கர் என்பவர் அருள்வாக்கு சொல்லக் கூடியவர் என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இரண்டாவது மகனான சங்கர் வேறு ஒருவருடன் தாயான காந்திமதியை மோட்டார் சைக்கிளில் உட்காரவைத்து கொண்டு வந்து இந்த முட்புதரில் தூக்கி போட்டு விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பெற்ற தாயை வயதான காலத்தில் கால்கள் செயலிழந்த நிலையில் கொஞ்சம் கூட இரக்கமும், மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்ட காந்திமதியின் மகனான சங்கரை கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதிமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.