என்னுடைய அடுத்த கட்ட இலக்கு சீனாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு தயாராவது தான் என்று இளவேனில் தெரிவித்துள்ளார்.
பிரேசிலில் உலக கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 வயதான இளவேனில் வளரிவன் சீனியர் உலக கோப்பையில் அடியெடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே 251.7 புள்ளிகள் பெற்று தங்க பதக்கத்தை வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவருக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இளவேனில் அளித்த பேட்டியில், சீனாவில் அடுத்து நடக்கவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு தயாராவதுதான் என்னுடைய அடுத்தக்கட்ட இலக்கு என்று கூறினார். மேலும் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வெல்ல உறுதுணையாக இருந்த எனது பெற்றோருக்கு பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன் என்றும், தமிழகத்தில் தான் துப்பாக்கி சுடுதல் பயிற்சியை மேற்கொண்டதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.