சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருபவர் திவ்யா. இவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லமா என்ற தொடரில் நடித்து வரும் அர்னவ்வும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு 2 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்தனர். அதன் பிறகு திவ்யா தனக்கும் அர்னவுக்கும் திருமணம் முடிந்து விட்டதாக கூறி அண்மையில் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் திவ்யா கர்ப்பிணியான தன்னை தன்னுடைய கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும், என்னுடைய கரு எப்போது வேண்டுமானாலும் கலையலாம் என்றும் கூறி ஒரு பரபரப்பான வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
அதன் பிறகு சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா அர்னவ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து நேற்று திவ்யா மகளிர் ஆணையத்திலும் அர்னவ் மீது புகார் கொடுத்துள்ளார். அதன் பிறகு நடிகை திவ்யா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, நான் அர்னவ் மீது கொடுத்த புகார்களில் சிலவற்றை எஃப்ஐஆரில் பதியாமல் விட்டுவிட்டனர். முஸ்லிமான தன்னை இந்து மதத்திற்கு மாறுமாறு அர்னவ் கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் கர்ப்பமான பிறகு என்னை கைவிட்டுவிட்டார். இது போன்ற பல்வேறு தகவல்களை அவர்கள் எஃப்ஐஆரில் பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர்.
எனவே இந்த விவரங்களை எஃப்ஐஆரில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறுவதற்காக தான் நான் வந்தேன். எனக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் என்று உறுதி அளித்திருக்கிறார்கள். எனக்கும் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக அர்னவ் எனக்கு செய்த துரோகத்திற்கு நியாயம் கிடைக்கும். சிலர் உன்னுடைய கணவருக்கு ஏற்றார் போல் நடந்து கொண்டு குடும்பத்தை நடத்து என்று கூறுகிறார்கள். இதேபோன்று எல்லா பெண்களும் இருந்துவிட்டால் யார்தான் நியாயத்தை வாங்கி கொடுப்பார்கள். அதனால் தான் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது. மேலும் அர்னவ் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்கள் என்றார்.