அரசின் கொடுமைகளை எதிர்த்து சீக்கிய மதகுரு ஒருவர் விவசாயிகளுக்கு ஆதரவாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் இந்த போராட்டம் தன்னுடைய மனதுக்கு வேதனை அளிப்பதாக கூறிய சீக்கிய மதகுரு ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்னல் மாவட்டம், நசிங் பகுதியில் வசிப்பவர் வசந்த பாபா ராம் சிங். சீக்கிய மத குருவான இவர் தற்கொலை செய்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 20 தினங்களுக்கு மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஆனால் தற்போது வரை விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு எந்த வகையிலும் முடிவு கிடைக்கவில்லை. டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மனவேதனை அடைந்த பாபா ராம் சிங் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அவர் விவசாயிகள் படும் இந்த கஷ்டத்தை தன்னால் பார்க்க முடியவில்லை என்று இறப்பதற்கு முன்னர் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார் .
அந்த கடிதத்தில், “விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இதற்கு அரசாங்கம் நீதி வழங்கவில்லை. இது மிகக் கொடுமையான செயல். சில விவசாயிகளின் உரிமைகளுக்காக தங்களின் விருதுகளை திருப்பி அனுப்பியுள்ளனர். எனவே அரசுக்கு எதிராக நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இது கொடுமைக்கு எதிரான குரல் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவான குரல்” என்று தன்னுடைய கடிதத்தில் எழுதியுள்ளார்.