புதுக்கோட்டையில் காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை திருடிய மர்ம நபர்கள் கைது செய்யபட்டனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தினர். ஒரு சில இடங்களில் வாக்கு சீட்டுகளில் குழப்பம் இருப்பதாக அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குப்பதிவுக்கு 24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 57.50% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க, 63000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இறுதியில் முதற்கட்ட வாக்குப்பதிவு 5 மணிக்கு நிறைவடைந்தது.
வாக்கு பதிவு முடிந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிப்பட்டியில் வாக்குச்சாவடியில் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் வாக்குப்பெட்டியை திருடி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணை செய்து வலை வீசி தேடி வந்தனர். அப்போது மூர்த்தியும் மற்றொரு நபரும் வாக்குப்பெட்டியை திருடியது விசாரணையில் தெரியவந்தது.
அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் மது போதையில் வாக்குப்பெட்டியை திருடியதாக தெரிவித்தனர். நல்ல படியாக சீல் உடைக்கப்படுவதற்கு முன்பாகவே தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த வாக்குப் பெட்டியை மீட்டது காவல்துறை. 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.