விவசாயி ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கானாங்காடு பிள்ளையார் கோவில் பகுதியில் ராஜேஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது வீட்டை பூட்டி விட்டு திருவண்ணாமலையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 13 கிலோ வெள்ளி பொருட்கள், 23 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 50 பவுன் தங்க நகை ஆகியவை காணாமல் போனது தெரியவந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் கண்ணன் இது பற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்கிருந்த தடயங்களை சேகரித்துள்ளனர்.
பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராஜேஷ் கண்ணன் வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.