ஆயுள் காப்பிட்டு தொகை பெற்று தருவதாக கூறி மூதாட்டியிடம் செல்போனில் பேசி வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஏமாற்றிய மர்ம பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள போடிமெட்டு சாலையில் ரஞ்சிதம் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் கந்தசாமி கடந்த சில வருடத்திற்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் ரஞ்சிதம் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மூதாட்டியுடன் பேசியுள்ளார். அப்போது ரஞ்சிதம் கணவர் கந்தசாமி பெயரில் ஆயுள் காப்பீட்டு தொகை உள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த பணத்தை பெறுவதற்கு மூதாட்டியின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார்.
இதனை நம்பிய மூதாட்டி அவரது மகள் ஸ்ரீதேவியின் வங்கி கணக்கு விவரங்களை வாட்ஸ்-அப் மூலம் தொலைபேசியில் பேசிய பெண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து ஸ்ரீதேவியின் செல்போன் எண்ணிற்கு வந்த ரகசிய குறியீட்டு எண்ணையும் ஸ்ரீதேவி அந்த பெண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீதேவியின் வங்கி கணக்கில் இருந்த 1 லட்சத்து 49 ஆயிரத்தை அந்த பெண் எடுத்துள்ளார். இதனையறிந்த ஸ்ரீதேவி அதிர்ச்சியடைந்து இதுகுறித்து தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரிடம் ரஞ்சிதம் மற்றும் ஸ்ரீதேவி புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அந்த மர்ம பெண் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.