இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததால் மதுரை, திருச்சி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பரபரப்பாக இருக்கக்கூடிய இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து தமிழக அரசு இரவு 10 மணி முதல் மாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளது. எனவே இந்த நேரத்தில் தனியார், அரசு பஸ், ஆட்டோ, கார் ஆகியவை அனுமதிக்கப்படாது. மேலும் ரயில் மற்றும் விமான நிலையம் செல்வதற்கு மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
அதேபோல் எரிபொருள் வாகனமும் சரக்கு வாகனமும் எந்தவித தடையும் இன்றி செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்ததையடுத்து மதுரை, திருச்சி, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மற்றும் புறநகர்ப் பகுதிகள் அனைத்தும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அனைத்து கடைகளும் இரவு 9 மணிக்கு மூடப்பட வேண்டும் எனவும் சாலையில் செல்பவர்கள் இரவு 10 மணிக்கு மேல் வெளியில் நடமாட கூடாது எனவும் போலீசார் ரோந்து வாகனத்தில் எச்சரித்து சென்றுள்ளனர்.