தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஜெனிலியா. இதையடுத்து அவர் சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின் உட்பட பல்வேறு படங்களில் நடித்து தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். சென்ற 2011-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை கரம் பிடித்த ஜெனிலியா, பின் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். இந்நிலையில் கடந்த நவம்பர் 18ம் தேதியன்று ஜெனிலியாவும், ரித்தேஷ் தேஷ்முக்கும் 10 ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடித்த மிஸ்டர் மம்மி என்ற படம் வெளியானது.
இது ஓடிடியில் வெளியாகியதால் வரவேற்பு பெறவில்லை. அதன்பின் ரித்தேஷ் தேஷ்முக் முதல் முதலாக டைரக்ஷனில் இறங்கி இயக்கி இருக்கும் திரைப்படம் “வேத்”. இப்படத்திலும் ஜெனிலியாவே கதாநாயகியாக நடிக்க, ரித்தேஷே ஹீரோவாகவும் நடித்து உள்ளார். வருகிற டிசம்பர் 30ம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. அண்மையில் கோலாப்பூர் பஞ்சகங்கா நதிக்கரையில் அமைந்திருக்கும் மகாலட்சுமி கோயிலுக்கு கணவன்-மனைவி இருவரும் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.
இதையறிந்து அங்கு வந்த செய்தியாளர்களை, பாதுகாப்பிற்காக வந்த பவுன்சர்கள் அவமரியாதையாக நடத்தியதுடன் அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது பற்றி ரித்தேஷ் தேஷ்முக் பேசியதாவது “நானும் ஜெனிலியாவும் இணைந்து கோவிலுக்குச் சென்று 10 ஆண்டுகள் ஆகி விட்டது. சினிமாவைப் பற்றி பேசுவதற்கான இடம் அது இல்லை. பத்திரிக்கையாளர் சந்திப்பிறகு நான் அழைப்பும் விடுக்கவில்லை. அதே நேரம் என் குழுவினர் செய்தியாளர்களை தாக்கியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.