ரேஷன் கடைக்கு சென்று கொண்டிருந்தவரை நிறுத்தி வாலிபர் கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் கடுகூர் பகுதியில் ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் ஓட்டுனராக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். அங்கு ஊரடங்கு அறிவித்ததால் ராஜா தனது சொந்த ஊரான கடுகூருக்கு சென்றார். இந்நிலையில் ராஜா அப்பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியில் அதே பகுதியில் வசிக்கும் தமிழ் மாறன் என்பவர் நின்றுகொண்டிருந்தார். இதனையடுத்து தமிழ்மாறன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ராஜாவை வேண்டுமென்றே நிறுத்தி தகாத வார்த்தையில் பேசி திடீரென அங்கிருந்த கட்டையை எடுத்து ராஜாவை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ராஜா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தமிழ்மாறனை கைது செய்ததோடு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.