காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள தெச விளக்கு பகுதியில் ஜெகநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மெக்கானிக்கான ராஜேஷ் கண்ணன் என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ் கண்ணனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் வெள்ளகுட்டி என்பவரின் மகளான புவனேஸ்வரிக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய புவனேஸ்வரி மற்றும் ராஜேஷ் கண்ணன் ஆகிய இருவரும் இணைந்து அப்பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டு தங்களது பெற்றோர் பிரித்து விடுவார்கள் என காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இதனால் காவல்துறையினர் இருவரின் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு காதல் தம்பதியை ஒன்றாக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் புது தம்பதிகள் இருவரும் ராஜேஷ் கண்ணனின் உறவினர் வீட்டில் தற்போது வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் புவனேஸ்வரி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த புவனேஸ்வரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அப்பகுதிக்கு சென்று புவனேஸ்வரியை காரில் கடத்தி சென்றுவிட்டனர். இதனையடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய ராஜேஷ் கண்ணன் தனது மனைவியை அவரது பெற்றோர்கள் கடத்திச் சென்றதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்துராஜேஷ் கண்ணன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புதுப்பெண்ணை கடத்திச் சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.