ஆழித்தேரின் தற்காலிக கூரைகள் பிரிக்கப்பட்டு ராட்சத தூண்கள் கொண்டு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகின்றது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்று வருகின்றது. அதன்படி ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஆழித் தேரோட்டம் நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெற்றது. இதனையடுத்து ஆடிப்பூர தேரோட்ட விழாவிற்காக ஆழித்தேருக்கு தற்காலிக கூரை அமைக்கப்பட்டது.
அதன்பின் கொரோனா தொற்று காரணமாக ஆடிப்பூர தேரோட்டம் மாற்றம் செய்யப்பட்டு பக்தர்கள் இன்றி சிறு தேர்பவனி கோவில் பிரகாரத்திற்குள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஆழித்தேரோட்டம் விழா அடுத்த வருடம் நடைபெறும் வரை மழை, வெயிலில் இருந்து தேரை பாதுகாக்க கண்ணாடி கூண்டு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆழித்தேரின் தற்காலிக கூரைகள் பிரிக்கப்பட்டு ராட்சத தூண்கள் கொண்டு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதுகுறித்து பக்தர்கள் கூறியபோது தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆழித்தேரை பாதுகாக்க கண்ணாடி கூண்டு அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.