இழப்பீடு கொடுக்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆண்டியப்பனூரில் கடந்த 1998-ஆம் ஆண்டு அணை கட்டுவதற்காக சுற்றி இருந்த விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தியது. இந்நிலையில் அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக சிலருக்கு மட்டுமே இழப்பீடு கொடுக்கப்பட்டதாக தெரிகின்றது.
இந்நிலையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை எனக் கூறி திடீரென ஆண்டியப்பனூர் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் திருப்பத்தூர்-ஆலங்காயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பின் அரசு அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிப்பதாக காவல்துறையினர் கூறியதால் விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.