மனைவியை நண்பனின் காதலியாக நடிக்க வைத்து 12 லட்சம் ரூபாய் மோசடி செய்த கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகின்றார். இவர் வாடகை கார்கள் வைத்து தொழில் நடத்தி வருகின்றார். இவருக்கு திருமணம் முடித்து வைக்க அவரதுபெற்றோர் பெண் தேடி வந்தனர். இவர்களில் பாலாஜியின் நண்பராக ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர் இருக்கின்றார். இவர் கார் டிரைவராக இருக்கின்றார். இதில் ராஜாவிற்கு நித்யா என்ற மனைவி உள்ளார். கடந்த 2018-ஆம் வருடம் ராஜா-நித்யா தம்பதியினர் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு ராஜாவின் நண்பரான பாலாஜி சென்றிருந்தார்.
இந்நிலையில் பாலாஜியிடம், ராஜா கூறியதாவது “எனது திருமணத்திற்கு வந்த சத்யா என்ற இளம்பெண் உன்னை பிடித்து இருப்பதாக கூறுகிறார். மேலும் அந்தப் பெண் உன்னிடம் செல்போனில் பேச விரும்புவதாக” அவர் தெரிவித்தார். இதனால் பாலாஜிக்கும் அந்தப் பெண்ணிடம் பேசுவதற்கு ஆர்வம் ஏற்பட்டது. இதனையடுத்து சத்யாவின் செல்போன் எண்ணிற்கு பாலாஜி தொடர்பு கொண்டு பேசினார். அதன்பின் பாலாஜிக்கு சத்யா மீது காதல் மலர்ந்தது. அப்போது சத்யா தான் பூனேவில் இருந்து மருத்துவம் படித்து கொண்டு இருப்பதாகவும், இதற்காக செலவிற்கு பணம் வேண்டும் என்று பாலாஜியிடம் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி சத்யா கேட்கும் பணத்தை பாலாஜி அவ்வபோது அவரது வங்கி கணக்கில் செலுத்தி வந்தார். இவர்கள் நேரில் சந்திக்காமல் செல்போனில் மட்டுமே பேசிக் கொண்டே இருந்ததால் பாலாஜிக்கு ஒரு கட்டத்தில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் சத்யா தொடர்பான விசாரணையை பாலாஜி தொடங்கினார். அப்போது சத்யா என்ற ஒரு இளம் பெண் கிடையாது என்றும் இத்தனை நாட்கள் செல்போனில் பேசியது தனது நண்பரான ராஜாவின் மனைவி நித்யா என்றும் பாலாஜிக்கு தெரியவந்தது.
இதனைதொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலாஜி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது “பாலாஜிக்கு வரன் தேடுவதை அறிந்த ராஜாவும், நித்யாவும் அவரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் திட்டமிட்டு ஏமாற்றி 12 லட்சம் ரூபாயை மோசடி செய்தது” காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் ராஜா மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஈரோடு கரூர் சாலையில் நின்று கொண்டிருந்த ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர்.