கணவன் தன்மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி சண்டை இட்டதால் மனம் உடைந்த மனைவி தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில் உள்ள ரேயிலடி ஹாஜியார் நகரில் மாதவன் என்பவர் (வயது 37) வசித்து வந்துள்ளார். இவர் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு ஆவுடையம்மாள் என்னும் 34 வயதுடைய மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து 14 வருடங்கள் ஆகின்றது. ஹரிணிதா எனும் <12 வயது> பெண் குழந்தை உள்ளது. மாதவன் மது அருந்தும் பழக்கம் கொண்டவர். இதனால் அடிக்கடி குடித்து வீட்டிற்கு வந்து மனைவியின் மீது சந்தேகம் அடைந்து சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இதனையடுத்து, சென்ற 20 ஆம் தேதி மது அருந்தி வழக்கம்போல் வீட்டிற்கு வந்த மாதவன் தன் மனைவி ஆவுடையம்மாளிடம் சண்டையிட்டு உள்ளார். இதனால் மிகவும் மனம் நொந்த ஆவுடையம்மாள் வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெய் எடுத்து தன் உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.அவரது உடலில் வேகமாக தீ பரவத் தொடங்கியது. வேதனை பொறுக்காமல் ஆவுடையம்மாள் கத்தி அழுதுள்ளார். அவரது சத்தம் கேட்டு மகள் ஹரிணிதா ஓடிவந்து பார்த்தாள். அங்கே தன் தாய் தீயில் எரிவதை பார்த்து கத்தி கூச்சல் போட்டு அழுதாள்.
அவளுடைய கதறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்து பார்த்தனர். அப்பொழுது ஆவுடையம்மாள் எரிந்து கொண்டிருப்பதை கண்டு உடனடியாக அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். தீவிர சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. தீக்காயமடைந்த ஆவுடையம்மாள் இடம் மயிலாடுதுறை மாஜிஸ்திரேட்டு அப்துல்கானி வாக்குமூலம் வாங்கிகொண்டார்.
வாக்குமூலத்தில் ஆவுடையம்மாள், தன் கணவர் தன் மீது சந்தேகம் அடைந்து அடிக்கடி குடித்துவிட்டு தன்னிடம் வந்து சண்டை போடுவதால் நான் மனம் உடைந்து இப்படி ஒரு முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.சிகிச்சை பலனின்றி ஆவுடையம்மாள் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின் ஆவுடையம்மாளின் சகோதரன் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதியபுரம் நாலாவது தெருவை சேர்ந்த சங்கரன் மகன் முப்பிடாதி (வயது 36) என்பவர் போலீஸிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையிலும்,ஆவுடையம்மாளின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் மயிலாடுதுறை போலீசார் மாதவன் மீது மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதன்பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.கணவன் சந்தேகமடைந்ததால் மனைவி மனம் உடைந்து தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.