பெண்ணை கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவர் தானாகவே காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சிகிரிபாளையத்தில் ரூபா என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் ரங்கசந்திரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் கார்த்திக் ஓசூரில் ரப்பர் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதியினர் ஆரம்பத்தில் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கார்த்திக்கிற்கு, மனைவி ரூபாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் கார்த்திக் அடிக்கடி ரூபாவுடன் தகராறு செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூபாவின் தந்தை இறந்ததால் அவர் தன் குழந்தைகளுடன் குஞ்சிகிரிபாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு இருந்த ரூபா தன்னுடைய கணவர் வீட்டிற்கு மீண்டும் திரும்பி வரவில்லை. இந்நிலையில் தனது மனைவியின் வீட்டிற்குச் சென்ற கார்த்திக் அவரை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் ரூபா வர மறுத்ததால் கார்த்திக் மனைவியின் வீட்டிலேயே தங்கினார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திக் தனது மனைவி ரூபாவை மீண்டும் குடும்பம் நடத்த அழைத்துள்ளார். அப்போதும் மனைவி வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கார்த்திக் அங்கிருந்த கத்தியால் ரூபாவின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதனால் ரூபா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் மனைவியை கொலை செய்த கார்த்திக் தானாகவே தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் போன்றோர் கார்த்திக்யிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் சப்-இன்ஸ்பெக்டர்களான கதிரேசன் மற்றும் கார்த்திகேயன் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து சென்று ரூபாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.