நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மஞ்சள்வயல் தெற்கு கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக இருக்கின்றார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் பாலசுப்பிரமணியன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி தகராறு செய்ததோடு அடித்து துன்புறுத்தி வந்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட தகராறில் பாலசுப்பிரமணியன் மனைவி ராஜேஸ்வரியை அடித்து விட்டு வெளியே சென்று விட்டார்.
இதனையடுத்து பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு வந்து கதவை தட்டியபோது அவருடைய மகள் ஜமுனாராணி திறந்துள்ளார். அதன்பின் வீட்டிற்குள் சென்ற பாலசுப்பிரமணியன் அங்கு உறங்கிக் கொண்டிருந்த மனைவி ராஜேஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கதவின் அருகில் இருந்த கல்லை எடுத்து அவர் தலையில் போட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜேஸ்வரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி தீர்ப்பு வழங்கியுள்ளார். அவர் தனது தீர்ப்பில் மனைவியை கொன்ற பாலசுப்பிரமணியனுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறையில் இருக்க உத்தரவை பிறப்பித்துள்ளார்.