நடிகர் சுஷாந்த் சிங்கின் வங்கியிலிருந்து 15 கோடி ரூபாய் மாயமானது தொடர்பாக அமலாக்கத்துறை முன்பு நடிகர் ரியா ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் அவரது காதலி ரியா செய்த சதிவலைகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. சுஷாந்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை நடிகை ரியா உட்பட பலருக்கு சம்மன் அனுப்பியது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை சுட்டிக்காட்டி ரியா அளித்த மனுவை அமலாக்கத்துறை நிராகரித்து விட்டதால் வேறு வழியின்றி மும்பை அலுவலகத்தில் அவர் நேரில் ஆஜரானார். நடிகி ரியாவின் ஆடிட்டரும் சுஷாந்தின் ஆடிட்டரும் ஏற்கனவே அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இது தவிர சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேனேஜர் ஸ்ருதி, மோனி, நண்பர் சித்தார்த்திடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் பீகார் போலீசார் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் சுஷாந்தின் பணத்தை பறிக்கவே திட்டமிட்டு ரியா அவரிடம் பழகி மோசடி செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனஅழுத்தம் எனக்கூறி சுஷாந்துக்கு அளவுக்கு அதிகமான மாத்திரைகளை ரியா கொடுத்ததாகவும் பீகார் போலீஸ் மனுவில் குறிப்பிட்டுள்ளது. சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணைக்கு மராட்டிய காவல்துறை ஒத்துழைப்பு கொடுக்க மறுத்ததால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற பீகார் அரசு பரிந்துரை செய்ததாக பாட்னா சிறப்பு காவல் கண்காணிப்பாளர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.