நடிகர் சூர்யா தனது நண்பர்களுடன் கல்லூரி நினைவுகளை நண்பர்கள் தினம் அன்று காணொளி மூலம் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் இறுதியாக நடித்த சூரரைப்போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் ரீமேக் ஆனது ஹிந்தியில் உருவாகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம், வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் கொண்டாடப்பட்ட நண்பர்கள் தினத்தை முன்னிட்டு லயோலா கல்லூரியில் படித்த நண்பர்களுடன் காணொளி மூலம் உரையாடியுள்ளார்.
அதில் அவரின் கல்லூரி நாட்களை பற்றியும் பசுமையான நினைவுகளையும் அவர்களிடையே பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் கல்லூரியில் செய்த குறும்புகள், நண்பர்கள் அவருக்கு வைத்த செல்லப் பெயர் போன்றவற்றை நினைவு கூர்ந்துள்ளார். அதிலும் முக்கியமாக அவர் கூறியதில் “லயோலா கல்லூரியில் 1992 ஆம் ஆண்டு எனக்கு இடம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. ஏனெனில் நடிகரின் பிள்ளைகள் பாதியில் படிப்பை நிறுத்தி விடுவார்கள் என்பதால் கல்லூரியில் இடம் கிடையாது என்று கூறினர். ஆனால் நான் கல்லூரிக்கு செல்வேன் என்று உறுதியாக கூறினேன். அதற்கு பிறகே இடம் அளித்தனர்” என்று கூறியுள்ளார்.