நடிகர் பசுபதியின் பெயரில் போலிக் கணக்குகளில் சமூக ஊடகத்தில் வலம் வந்தவர்களுக்கு அவர் முற்றுபுள்ளி ஒன்று வைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயரில் சமூக ஊடகங்களில் போலியாக பலர் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சார்ப்பட்டா பரம்பரை திரைப்படத்தின் ரங்கன் வாத்தியாரான பசுபதியின் பெயரிலும் போலி கணக்கு வைத்துள்ளனர். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனைவருக்கும் வணக்கம். தமிழ் திரையுலகில் மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் கொண்டாடுகின்ற திரைப்படமாக BLUE PICTURES & K9 STUDIO தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சார்ப்பட்டா பரம்பரை உருவாகியுள்ளது. இந்த சார்ப்பட்டா பரம்பரை திரைப்படமானது வடசென்னை மக்களின் வாழ்வையும் 70களில் வாழ்ந்த குத்துச்சண்டை வீரர்களின் நிலைமையையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை கண்டு அனைவரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த கதையை எடுத்துக்கொண்டால் சொல், செயல் காட்சிகளில் இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள் ரங்கன் கதாபாத்திரத்தை நேர்த்தியாக செதுக்கியதற்கு நன்றிகள். மேலும் எனது திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவர் மற்றும் நெருக்கமானவர். எனது நண்பன் ஆர்யாவுடன் இணைந்து நடித்ததில் மிகவும் பெருமையே. என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், எந்த பாரபட்சமும் இன்றி இப்படத்தை தயாரித்த BLUE PICTURES & K9 STUDIOவிற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் எனது 22 வருட திரைப்பயணத்தில் என்னுடன் பயணித்த அனைத்து தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடக நண்பர்கள், சக கலைஞர்கள் மற்றும் ரசிகர் பெருமக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதிலும் குறிப்பாக நான் எந்த சமூக ஊடகங்களிலும் இல்லாததால் இந்த அறிவிப்பை PRO ஜான்சன் வாயிலாக வெளியிட்டுள்ளேன்” என்ற பதிவை வெளியிட்டு அவர் பெயரில் உள்ள போலி கணக்குகள் சமூக ஊடகங்களில் வலம் வருவதற்கு முற்றுப்புள்ளி ஒன்றை வைத்துள்ளார்.