உலகெங்கும் இருக்கும் நாடுகளில் புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள் தான் என்றாலும், இந்தியாவில் மட்டும் நிலைமை தலைகீழாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நம் நாட்டில் புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதோடு அவர்களை அதிகம் பாதிப்பது மார்பகப் புற்று நோய் என்பது தெரியவந்திருக்கிறது.
இந்தியாவில் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்கு வருடந்தோறும் நவம்பர் 7ஆம் தேதியன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுதும் 22.50 லட்சம் பேர் புற்று நோயுடன் வாழ்ந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
தேசிய புற்று நோய் பதிவுதிட்டம் (NCRP) வெளியிட்டுள்ள அறிக்கை படி 2020ல் 13.9 லட்சத்தில் இருந்து 2025-க்குள் 15.7 லட்சமாக புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது (இது கிட்டத்தட்ட 20% அதிகம்) என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
எனினும், ஒரு நல்ல விஷயம் என்னவெனில் பொதுவான புற்று நோய்களில் மூன்றில் ஒரு பகுதியாவது நம்மால் தடுக்க இயலும் என்பது தான். அனைத்து விதமான புற்று நோய்களிலும் மார்பக புற்றுநோய் இந்திய நகரங்களில் குறிப்பாக டெல்லி,பெங்களூரு,சென்னை போன்ற பெரு நகரங்களில் பெண்களில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.