Categories
உலக செய்திகள்

நாடு கடத்தப்படும் நவாஸ் ஷெரீப்… பாகிஸ்தான் அரசு கோரிக்கை…!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரை நாடு கடத்துவதற்கு பாகிஸ்தான் அரசு, இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் மீதுள்ள ஊழல் வழக்கில், அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் கடந்த 2018 ஆம் ஆண்டு அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன் பின்னர் நவாஸ் ஷெரீப், லாகூரில் இருக்கின்ற கோட்லாக்பாத் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், சிறையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், லண்டனில் சிகிச்சை பெறுவதற்காக பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு எட்டு வாரங்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. அதன்பின்னர் நவாஸ் ஷெரீப் லண்டனில் சிகிச்சை பெறுவதற்கு புறப்பட்டுச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவால், அவருக்கு மேலும் நான்கு வாரங்கள் ஜாமீன் நீட்டிக்கப்பட்டது. அதே சமயத்தில் மீண்டும் ஜாமீனை நீட்டிக்க வேண்டுமென்றால் நவாஸ் ஷெரீப்பின் மருத்துவ அறிக்கைகளை பஞ்சாப் மாகாண அரசிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்று லாகூர் ஐகோர்ட் கூறியுள்ளது. ஆனால் நவாஸ் ஷெரீப்பின் தரப்பு, அவரின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யாமல் உடல் நிலை குறித்த மருத்துவ சான்றிதழை மட்டும் தாக்கல் செய்துள்ளது. அதனை ஏற்றுக் கொள்வதற்கு மருத்துவ வாரியம் மறுப்பு கூறி விட்டது. இதனைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப், லண்டன் வீதிகளில் சகஜமாக உலா வருகின்ற புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதனை அறிந்த பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு, நவாஸ் ஷெரிப்பை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளது. இந்நிலையில் நவாஸ் ஷெரிப் நாடுகடத்த, பாகிஸ்தான் அரசு இங்கிலாந்து அரசிடம் முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் தேசிய பொறுப்புடைமை மற்றும் உள்துறை விவகாரங்களுக்கான பிரதமரின் சிறப்பு ஆலோசகர் ஷாஜாத் அக்பர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” நவாஸ் ஷெரீப்பை, பாகிஸ்தான் அரசு தலைமறைவு குற்றவாளியாக கருதுகின்றது. அதனால் அவரை பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து அரசுக்கு முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான இந்த நடவடிக்கையை ஒரு தனிப்பட்ட தாக்குதலாக கருதக் கூடாது. நவாஸ் ஷெரிப் நல்ல உடல் நலத்துடன், லண்டன் வீதிகளில் உலா வருவது பாகிஸ்தான் நீதித்துறையின் முகத்தில் விழுந்த ஒரு அறை. அரசாங்கத்தால் இதனை அனுமதிக்க முடியாது. அதில் தனிப்பட்ட முறையில் எதுவும் கிடையாது. நாங்கள் சட்டத்தை செயல்படுத்துவதற்கும், அதன் தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமே முயற்சி செய்கிறோம். நவாஸ் ஷெரீப் நாடு கடத்தப்படுவதை விரைவுபடுத்த தேசிய பொறுப்புடமை முகமையை பாகிஸ்தான் அரசு அனுப்பும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |